Wednesday, December 23, 2015

ராகி சாலட் என்பது மிகவும் சத்தான ஓர் உணவு. பொதுவாக நாம், முளைவிட்ட பச்சைப்பயறு அல்லது கொண்டைக்கடலை சால்ட் செய்து சாப்பிடுவோம். ஆனால் சிலருக்கு இவை வயிற்றை உப்புசமாக்கி, வாய்வுத் தொந்தரவை உண்டாக்கிவிடும். ஆனால், முளகட்டிய கேழ்வரகில் இந்தப் பிரச்னை இல்லை. மிகுந்த சத்து கொண்டதும் கூட. 

ராகி சாலட்
தேவையானவை: கேழ்வரகு & அரை கப், பொட்டுக்கடலை & 2 டேபிள்ஸ்பூன், தக்காளி & 1, சின்ன வெங்காயம் & 4, 5, எலுமிச்சம்பழச் சாறு & தேவையான அளவு, மிளகுத்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & சுவைக்கேற்ப, கொத்தமல்லித் தழை & ஒரு பிடி.  
செய்முறை: கேழ்வரகை நன்கு கழுவி, சுத்தம் செய்து 12 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, மெல்லிய வெள்ளைத் துணியில் தளர்வாகக் கட்டித் தொங்கவிடவும். ஒரு நள் முழுதும் (24 மணி நேரம்) இப்படித் தொங்கவிடும்போது, கேழ்வரகு நன்கு முளை விட்டிருக்கும். இதைத்தான் சாலட் செய்யப் போகிறோம்.  
6 டேபிள்ஸ்பூன் முளைவிட்ட கேழ்வரகை எடுத்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளியைச் சேர்த்து, பொட்டுக்கடலையையும் சேர்த்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும். பிறகு உப்பு, மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்துவிடலாம். 
குறிப்பு: 
* இந்த சாலட்டில் புரோகோலி சேர்த்துக்கொள்ள விரும்பினால், அதையும் சேர்க்கலாம். ஒரு தூண்டு புரோகோலியை எடுத்து நன்கு துருவி, சாலட்டில் சேர்க்கவேண்டும்.
பயன்கள்: 
* கேழ்வரகில் இரும்புச்சத்து அதிகம். முளைவிட்ட கேழ்வரகில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், அந்த இரும்புச்சத்தை நம் உடல் முழுமையாக கிரகிக்க உதவுகிறது. வெறும் இரும்புச்சத்து மட்டும் உள்ள உணவைச் சாப்பிடுவதை விட, அதை வைட்டமின் சி & இருக்கும் உணவுடன் சேர்த்துச் சாப்பிடும்போது, இன்னும் நன்றாகக் கிரகிக்கப்படும். 
* பொட்டுக்கடலை, மிக எளிதாக செரிக்கக் கூடிய புரதச் சத்து. உடலிலும் எளிதாகச் சேரும்.
* வெங்காயம், தக்காளி, புரோகோலி, கொத்தமல்லி எல்லாமே நார்ச்சத்துடைய பொருட்கள். எடைக்குறைப்புக்கு நன்கு உதவக் கூடியவை. நார்ச்சத்துள்ள பொருட்கள் பொதுவாக, கொழுப்பைக் கரைக்கக் கூடியவை. 
* மாலை வேளைகளில், பசிக்கும் சமயத்தில் என்ன சாப்பிடுவது எனத் தெரியாமல் தட்டை, மிக்சர் என எண்ணெய்ப் பலகாரங்களைச் சாப்பிடுவதை விட, இதுபோன்ற ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட்டால், எடை குறைய உதவுவதுடன், சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.