Thursday, January 7, 2016

ஆயுர்வேத சமையல் வருமுன் தடுப்பதற்கும், வந்தபின் தீர்ப்பதற்கும்!

ஆயுர்வேத சமையல்
வருமுன் தடுப்பதற்கும், வந்தபின் தீர்ப்பதற்கும்!
கொடும்புளி ரசம்

நாம் தக்காளி ரசம், பைனாப்பிள் ரசம், பருப்பு ரசம் என பல வகை ரசங்கள் செய்வோம். ஒவ்வொன்றுமே ஒரு மருத்துவ குணம் உடையதுதான். இந்த கொடும்புளி ரசம், உடல் பருமன் உள்ளவர்களுக்கு, தேவையற்ற சதையைக் குறைக்க உதவும் ரசம். நல்ல ஜீரணமும் ஆகும். இதை சமஸ்கிருதத்தில் ‘கோகம்’ என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் ‘கார்சீனியா’ என்பார்கள். நீங்கள் எந்த ஒரு ‘வெயிட் லாஸ்’ மருந்தை எடுத்துக்கொண்டாலும், அதில் உள்ள பொருட்களின் பட்டியலில் முதல் பெயராக கார்சீனியா தான் இருக்கும். ஏன் என்றால், கொழுப்பைக் கரைப்பதில் இதன் பங்கு அதிகமாகவே உண்டு.

தேவையானவை: கொடும்புளி & ஒரு நெல்லிக்காய் அளவு உருண்டை, சுக்கு & ஒரு சிறிய துண்டு (50 கிராம்), மிளகு & 50 கிராம், திப்பிலி & 25 கிராம், ‘ராக் சால்ட்’ எனப்படும் உப்பு & ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி & ஒரு பிடி, பூண்டுப் பல் & 5. தாளிக்க: பசு நெய் & அரை டீஸ்பூன், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை & மூன்றும் தாளிக்கத் தேவையான அளவு.
செய்முறை: சுக்கு, மிளகு, திப்பிலி & இவை மூன்றையும் கரகரப்பாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். கொடும்புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்துக் கொள்ளவும். பூண்டுப் பற்களை நசுக்கி வைத்துக்கொள்ளவும். கடாயில் நெய்யை விட்டு, தாளிப்புப் பொருட்களைச் சேர்த்து, கரைத்து வைத்திருக்கும் ரசம், பொடித்து வைத்திருக்கும் ரசப்பொடியில் ஒரு டீஸ்பூன், நசுக்கிய பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து, உப்புப் போட்டு கொதிக்கவிட வேண்டும். கொதிக்கும்போது, கொத்தமல்லித் தழையைப் போட்டு இறக்கவும்.
குறிப்பு: அயோடைஸ்டு உப்பு பயன்படுத்தக் கூடாது.

பயன்கள்:
* சாப்பிட்ட உணவு செரிக்காமல், வயிறு உப்புசமாக, அதனால் உடல் கனமாக இருப்பது போலவும் உணர்பவர்களுக்கு இந்த கொடும்புளி ரசம் நலல் மருந்து. தினமும் இதைச் சாப்பிட்டு வர, ஜீரணசக்தி மேம்படும்.
* தொப்பை நன்றாகவே குறையும். குண்டான பெண்களுக்கு, தொடை மற்றும் பின்பக்கத்தில் சேர்ந்திருக்கும் சதையும் குறையும்.
* ‘திரிகடுகம்’ எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி எடையைக் குறைக்க மிகவும் உதவும். உடலின் ‘வளர்சிதை மாற்றம்’ சீர்படுவதற்கு இந்தத் திரிகடுகம் மிகவும் உதவும். ‘திரிகடுக சூரணம்’ எப்போதுமே கைவசம் வீட்டில் இருந்தால், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிறு சம்பந்தமான எந்தவிதமான பிரச்னைகளும் அணுகாது.
* உடல் எடை நாளுக்கு நாள் அதிகமாகி, வேலை செய்ய முடியாமல் மந்தமாக, சோம்பி இருப்பவர்கள், தினமும் கொடும்புளி வைத்துச் சாப்பிடவேண்டும்.

No comments:

Post a Comment